தமிழகம்

3,000 கூட்டுறவு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா: பேரவையில் முதல்வர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 2,996 கூட்டுறவு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 381 கூட்டுறவு அமைப்புகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் ரூ.23.73 கோடியில் 110 கூட்டுறவு அமைப்புகளுக்கு கட்டிடங்கள் கட்டப்படும். 203 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.8.32 கோடியில் பாதுகாப்பு அறைகள், கதவுகள் அமைக்கப்படும்.

மாநிலம் முழுவதும் 2,966 கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்புக்காக ரூ.16 கோடியே 2 லட்சம் செலவில் உள்சுற்று தொலைக்காட்சி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். நடப்பு ஆண்டில் ரூ.9.30 கோடியில் 1,240 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்கள் கணினி மயமாக்கப்படும்.

பொது விநியோக திட்டத்துக்காக கொள்முதல் செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களை கிடங்குகளில் இறக்குதல், சிப்பம் இடுதல் போன்ற பணிகளைச் செய்ய இயந்திரங்கள் வழங்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், கிணத்துக்கடவு, கருமத்தம்பட்டி, கடலாடி, தூத்துக்குடி, தேவகோட்டை, புனக்குளம், சாத்தான்குளம் ஆகிய இடங்களில் உள்ள நடுத்தர அளவுள்ள கிடங்குகள், திருவாரூர் மாவட்டம் கோவிலூரில் புதிதாகக் கட்டப்படவுள்ள கிட்டங்கி ஆகியவற்றில் ரூ.14 கோடியில் தானியங்கி சுமைதூக்கி அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT