தமிழகம்

நெல்லை எக்ஸ்பிரஸ் உட்பட 3 விரைவு ரயில்களின் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு திமுக எம்பி கோரிக்கை

செய்திப்பிரிவு

நெல்லை உட்பட 3 விரைவு ரயில்களின் சேவையை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு திமுக எம்.பி. சா.ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமிழக அரசு தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னையிலிருந்து இன்று முதல் சில முக்கிய ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவைகளில் சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை வரும் நெல்லை அதிவிரைவு ரயில் சேவை அளிக்கப்படாதது வேதனைக்குரியது. நெல்லை அதிவிரைவு ரயிலில் இணைக்கப்படும் 24 ரயில் பெட்டிகளும் எப்பொழுதும் நிரம்பி ரயில்வே துறைக்கு லாபத்தை ஈட்டித்தருவதாகும். தற்பொழுது தென்னகத்திற்கு கன்னியாகுமரி ரயில் மட்டிலுமே இயக்க உத்திரவிட்டிருப்பதினால் 20 சதவீத பயணிகள் மட்டுமே பயன்பெற முடியும்.

அதேபோல் மும்பையில் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு எந்தவித வசதியும் இன்றி பரிதவிக்கிறார்கள். மேற்கூறிய ரயிலை இயக்குவதற்கு மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் அனுமதி அளிக்க மறுப்பின் அந்த ரயிலை மும்பையிலிருந்து எடுத்து நான் ஸ்டாப் ஆக இயக்கி முதல் நிறுத்தத்தை தமிழக்கதில் அமையுமாறு ரயிைலை இயக்கச் செய்யும்படி ஆலோசனை செய்து மும்பை - நாகர்கோவில் ரயிலையும் இயக்கிட வேண்டும். தொழில் நகரமான கோயம்புத்தூருக்கு தென் தமிழகத்திலிருந்து ஏராளம் மக்கள் கோயம்புத்தூருக்கு வேலைக்காக செல்லும் நிலையில் நாகர்கோவில் - கோயம்புத்தூர் ரயிலும் மிகவும் அவசியமாக இருக்கிறது. எனவே, சென்னை - திருநெல்வேலி, கோயம்புத்தூர் - நாகர்கோவில் மற்றும் மும்பை - நாகர்கோவில் ஆகிய ரயில்களையும் சேர்த்து இயக்கும் வகையில் தமிழக அரசு அனுமதி அளித்து அதனை தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

SCROLL FOR NEXT