தமிழகத்தில் திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், நெடுஞ்சாலை உணவகங்கள் மற்றும் விருந்து அரங்கங்கள் ஆகியவை சுற்றுச்சூழல் விதிகளின்கீழ் அனுமதி பெற வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், ‘‘திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், நெடுஞ்சாலை உணவகங்கள் மற்றும் விருந்து அரங்கம் ஆகியவை நீர், காற்று மற்றும் ஒலி மாசு தடுப்புசட்டவிதிகளின்படி நீர் பயன்பாட்டில் சிக்கனம், திட, திரவ கழிவைமேலாண்மை செய்தல், வாகனம் நிறுத்த இடவசதி குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள வழிமுறையை கடைபிடிக்க வேண்டும். அதை உள்ளாட்சி அமைப்புகள், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், தொடர்புடையஅமைப்புகள் கண்காணிக்க வேண்டும்’’ என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும், மாசுபடுத்துவோரிடம்அதை சரி செய்யும் செலவை வசூலிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, அனைத்து திருமண மண்டபம், ஹோட்டல், நெடுஞ்சாலை உணவகம், விருந்து அரங்கம் ஆகியவை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள வழிமுறையை கடைபிடிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட நிறுவனங்களை நிறுவுதல், இயக்குவதற்கான அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற வேண்டும். மேலும் விவரங்களை www.tnpcb.gov.in -ல் அறிந்து கொள்ளலாம்.