கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி மாநில குடிசைமாற்று நல வாரியம் சிக்கியுள்ளதால் ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு நிதி ஒதுக்காததால் ஒருவருக்குக்கூட புதுச்சேரியில் இந்தத் திட்டத்தில் சொந்த வீடு தரப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சருக்குப் புகார் தெரிவித்து பாஜக கடிதம் அனுப்பியுள்ளது.
புதுச்சேரியில் குடிசைமாற்று நல வாரியம் அமைக்கப்பட்டது. குடிசையில் வாழும் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான கட்டிடங்களை உருவாக்கி தந்து சுற்றுப்புறச் சூழலைச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனம் தற்போது பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தையும் அமல்படுத்தி வருகிறார்கள். சரியாகச் செயல்படுத்தாதது தொடர்பாக புதுச்சேரி பாஜக மத்திய உள்துறைக்கு புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறியதாவது:
பிரதமரின் கனவுத் திட்டமான ஏழைகளுக்கு வீடு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் இதுவரை இந்தியா முழுவதும் 5 கோடி மக்களுக்குச் சொந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், நம் புதுச்சேரியில் இதுவரை ஒருவருக்குக்கூட இந்தத் திட்டத்தில் சொந்த வீடு வழங்கப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தத் திட்டத்திற்காக வழங்கிய முதல் தவணை 80 கோடி ரூபாயில் இதுவரை 57 கோடி ரூபாய் மட்டுமே மாநில அரசால் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு தனது பங்களிப்பாக வழங்கப்பட வேண்டிய தொகை பெருமளவில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
சுமார் 200 பேர் பணிபுரியும் இந்த புதுச்சேரி குடிசைமாற்று வாரியத்தில் ஒரு ஆண்டிற்கு சம்பளமாக குறைந்தது 6 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு சம்பளத்திற்காக 5 கோடி ரூபாயும் 2018-ம் ஆண்டு ரூ.50 லட்சமும் 2019-ம் ஆண்டு ரூ.1 கோடியும் 2020 ஆண்டு ரூ.2 கோடியும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குடிசைமாற்று நலவாரிய ஊழியர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக முழுமையான சம்பளம் வழங்காத நிலையில் புதுச்சேரி மாநில அரசு உள்ளது. கடந்த 7 மாதங்களாக அந்தச் சம்பளம் வழங்குவதையும் நிறுத்திவிட்டது.
தினப்படி அலுவலகத்தை நடத்துவதற்குக்கூட சிரமப்படும் நிலையில் குடிசைமாற்று வாரியம் இருந்தால் எப்படி ஏழை மக்களுக்கு உதவ முடியும் என்ற கேள்வி எழுகிறது.
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன் உடனடியாக புதுச்சேரி மாநில அரசின் மீது நடவடிக்கை எடுத்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த புதுச்சேரி மாநில குடிசைமாற்று நல வாரியத்தை சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன்.
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.