சென்னையில் ஆன்லைன் வியாபார நஷ்டத்தை ஈடுகட்ட, தனது தந்தை பங்குதாரராக உள்ள நகைக்கடையில் 14 கிலோ தங்கத்தைத் திருடிய இளைஞர், சிசிடிவி காட்சி மூலம் சிக்கி கைதானார்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெருவில் வசிப்பவர் ராஜ்குமார் சோப்ரா (42). இவர் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவரது நண்பரான சுபாஷ் சந்த் போத்ரா என்பவருடன் சேர்ந்து கடந்த இருபது வருடங்களாக, யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரப்பன் தெருவில் சங்கம் ஜூவல்லர்ஸ் என்னும் பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
ராஜ்குமார் சோப்ரா கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி 7 மணிக்கு கடையை மூடிவிட்டுச் சென்றார். மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்டு 24-ம் தேதி அன்று காலை 10 மணியளவில் கடையைத் திறந்துள்ளார். கடையில் உள்ள லாக்கரைத் திறந்து பார்த்தபோது அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 14 கிலோ எடை கொண்ட தங்க நகைகளைக் காணவில்லை.
அதை லாக்கரைத் திறந்து யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்குமார் சோப்ரா, யானைக்கவுனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காவல் ஆணையர் உத்தரவின் பேரில் யானைக்கவுனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதில் ராஜ்குமார் சோப்ராவின் தொழில் பங்குதாரரான சுபாஷ் சந்த் போத்ராவின் மகன் ஹர்ஷ்கோத்ரா, ஆகஸ்டு 21 அன்று ராஜ்குமார் சோப்ரா கடையை மூடிவிட்டுச் சென்ற பின்னர் அன்று இரவு 8.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக பெரிய அளவிலான பையுடன், அப்பகுதியில் நடமாடியது தெரியவந்தது.
அதன்பேரில் 2 நாட்களுக்கும் முன் ஹர்ஷ்கோத்ராவைப் (24) பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தங்களது கடையில் தங்க நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் 11.5 கிலோ தங்க நகைகளை வைத்திருந்த லாக்கர் ஒன்றிலிருந்து நகைகளையும், 1 இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் நகையைத் திருடிய ஹர்ஷ்கோத்ரா ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் ரூ. 1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க தனது தந்தை பங்குதாரராக உள்ள நகைக் கடையிலிருந்து தங்க நகைகளைத் திருடி ஈடுகட்டலாம் என்று நினைத்துத் திருடியதாகத் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்ட ஹர்ஷ்கோத்ரா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை சிசிடிவி காட்சிகளைப் பல இடங்களில் சேகரித்து விசாரணை நடத்தி திருட்டுப்போன நகைகளை மீட்ட யானைக்கவுனி போலீஸாரைக் காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.