சென்னையில் நாளை மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் நேற்று ஆய்வு செய்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முழு ஏற்பாடுகள்; சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை முதல் இயக்கம்: அச்சமின்றி பயணிக்கலாம் என அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

செய்திப்பிரிவு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வரும் 7-ம் தேதி (நாளை) முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதையொட்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், சோதனை ஓட்டம் சென்ற மெட்ரோ ரயிலில் சிறிது தூரம் பயணம் செய்து, பயணிகளுக்கான வசதிகள், சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:

மெட்ரோ ரயில் நிறுவனங்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், ரயில் பெட்டிகள், மெட்ரோ நிலையங்களின் தூய்மை மற்றும் பராமரிப்பு, தொடுதல் இல்லா பயணச்சீட்டு வழங்கும் முறை, கூட்ட நெரிசலை தவிர்க்கும் முறை, குளிர்பதன வசதிகள் மேலாண்மை, இணைப்பு போக்குவரத்து வசதிகளை கையாளுதல், கரோனா தொற்றுடன் மெட்ரோ நிலையங்களுக்கு வருபவர்களை கையாளுதல் தொடர்பாக மத்திய அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், சென்னையில் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்களை இயக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. ரயில் பெட்டிகளில் வெப்பநிலை அளவு 24 முதல் 30 டிகிரி அளவில் பராமரிக்கப்படும். சுத்தமான காற்றோட்டத்தின் அளவு 4 மடங்கு அதிகரிக்கப்பட்ட நிலையில் பெட்டிகள் இயக்கப்படும். மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று, காலை 7 மணி முதலே ரயில் சேவை தொடங்கும். கட்டணத்தில் மாற்றம் இல்லை. பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மெட்ரோ ரயிலில் பயணிக்க ‘க்யூஆர் கோடு’ (QR Code) முறையில் டிக்கெட் வழங்கப்படும்.

ஏற்றுமதி, இறக்குமதி இல்லாததால் உற்பத்தியில் சற்று தேக்கம் உள்ளது. எனினும், முதலீட்டாளர்கள் விரும்பி முதலீடு செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தொழில் துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT