திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு 185 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், 285 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரியவந்துள்ளது.
100 மரணங்களை கணக்கில் சேர்க்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பற்றிய விவரங்களை திருநெல்வேலி வி.எம். சத்திரத்தை சேர்ந்த பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார். இதற்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொதுதகவல் அலுவலர் ஆ. செந்தில்வேல் அளித்துள்ள விவரங்கள்:
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இணைநோய்கள் ஏதுமின்றி கரோனாவால் மட்டும் ஜூன் மாதத்தில் 2 பேர், ஜூலை மாதத்தில் 43 பேர், ஆகஸ்ட் மாதத்தில் 37 பேர் என்று மொத்தம் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
இணைநோய்கள் மற்றும் கரோனாவால் மே மாதத்தில் ஒருவரும், ஜூன் மாதத்தில் 7 பேரும், ஜூலை மாதத்தில் 61 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 60 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் ஜூன் மாதத்திலும், 27 பேர் ஜூலை மாதத்திலும், 45 பேர் ஆகஸ்ட் மாதத்திலும் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக மே மாதத்தில் ஒருவர், ஜூன் மாதத்தில் 11, ஜூலை மாதத்தில் 131, ஆகஸ்ட் மாதத்தில் 45 பேர் என்று மொத்தமாக 285 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசு தினமும் வெளியிடும் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு விவரங்கள் பட்டியலில் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை வரையில் மொத்தம் 185 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 100 மரணங்கள் மறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.