மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியைச் சுற்றிலும் ரூ.21 கோடியில் மிக பிரம்மாண்டமாக நான்கு வழிச்சாலையும், இரு வழிச்சாலைகளும் போடப்பட்டுள்ளது.
ஆனால், மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை, கட்டுமானப்பணியும் தொடங்கவில்லை.
இந்தியாவின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. அதனால், அந்த மருத்துவமனை கட்டுமானப்பணி ஏற்கெனவே தொடங்கி சுறுசுறுப்பாக நடக்கிறது.
ஆனால், தமிழகத்திற்கான மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜெய்கா (JICA- Japan International Cooperation Agency) நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டது. ‘ஜெய்கா’ நிறுவனம் உயர் அதிகாரிகள் குழு, தோப்பூரில் வந்து ஆய்வு செய்து சென்றனர்.
அவர்கள், தற்போது வரை மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இதற்கிடையில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடி ‘எய்ம்ஸ்’க்கு ஒதுக்கப்பட்ட 201.75 ஏக்கர் நிலத்தில் அடிக்கல் நாட்டிச் சென்றார்.
அதன்பிறகு மத்திய அரசு, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.21.20 கோடி நிதி ஒதுக்கியது.
இந்த நிதியைக் கொண்டு எய்ம்ஸ் அமையும் இடத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி, எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கன்னியாகுமரி-பெங்களூரு நான்குவ ழிச்சாலைக்கான இணைப்பு சாலையும், ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரை மற்றொரு இணைப்பு சாலையும் போடும் பணி தொடங்கியது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடம் பெங்களூரு - கன்னியாகுமரி என்எச்7 நான்கு வழிச்சாலையில் இருந்து சுமார் 3.5 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையில் இருந்து ‘எய்ம்ஸ்’ அமைய உள்ள இடத்திற்கு நான்கு வழிச்சாலையாகவும், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கரடிக்கல் வரையிலான 6 கிலோ மீட்டர் சாலை இரு வழிச்சாலையாகவும் போடப்பட்டது. இரண்டு கட்டமாக பணிகள் நடந்த இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. பெயிண்டிங் அடிக்கும் பணிகள்தான் பாக்கியிருக்கிறது.
தற்போது சாலைப்பணிகள் நிறைவடைந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் பகுதியைச் சுற்றி சாலை கட்டமைப்பு வசதிகள் பார்ப்பதற்கு பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், மருத்துவமனை அமைய உள்ளத்தில் இன்னும் கட்டுமானப்பணிப் மட்டும் தொடங்கப்படவில்லை.
வெறும் பொட்டல் காடாக அப்பகுதி காட்சியளிக்கிறது. அதனால், எதிர்கட்சிகளும், சுற்றுவட்டார மக்களும், எய்ம்ஸ் மருத்துமனைக்காக போடப்பட்ட பிரமாண்ட சாலைகள் இங்கே இருக்கிறது, மருத்துவமனை எங்கே என்று கிண்டலாக பேசும் நிலையே தொடர்கிறது.
ஆனால், தமிழக அரசோ ஆரம்பம் முதல் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முயற்சிகளில் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்று தென் தமிழக மக்கள் ஆதங்கமடைந்துள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘இந்த நேரத்தில் கட்டுமானப்பணிகள் தொடங்கியிருக்க வேண்டும். டிசம்பரில் ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கி உள்ளதாக உறுதியளித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் முதலில் கட்டமைப்பு வசதிகள்தான் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும்.
ஆனால், நிதி ஒதுக்காததால் கட்டுமானப்பணி தொடங்க நீண்ட காலம் ஆகிவிட்டது. இடையில் கரோனாவால் மத்திய அரசு ஜப்பான் நிறுவனத்திடம் நிதியை கேட்கக்கூடிய சூழ்நிலையில் இல்லை. அதுவே கட்டுமானப்பணி தாமதமாகுவதற்கு முக்கியக் காரணம், ’’ என்றனர்.