தமிழகம்

குமரியில் தொடர் சாரல் மழையால் மிதமான தட்ப வெப்பம்: குருந்தன்கோட்டில் 30 மிமீ., பதிவு

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மிதமான தட்பவெப்பம் நிலவுகிறது. குருந்தன்கோட்டில் அதிகபட்சமாக 30 மிமீ., மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை பொழிந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை, மற்றும் அணைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், குளச்சல், தக்கலை, குலசேகரம் உட்பட மாவட்டத்தின் பரவலாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து இயல்பான தட்பவெப்பம் நிலவி வருகிறது.

அதிகபட்சமாக இன்று குருந்தன்கோட்டில் 30 மிமீ., மழை பெய்திருந்தது. சுருளோட்டில் 12 மிமீ., நாகர்கோவிலில் 7, பாலமோரில் 9, கோழிப்போர்விளையில் 10, முள்ளங்கினாவிளையில் 8 மிமீ., மழை பதிவாகியிருந்தது. குமரியில் பெய்து வரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 29 அடியாக உள்ள நிலையில் அணைக்கு விநாடிக்கு 502 கனஅடி தண்ணீர் வருகிறது. இதைப்போல் பெருஞ்சாணி அணையில் 60 அடி தண்ணீர் உள்ள நிலையில் 105 கனஅடி தண்ணீர் வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13 அடியாக உள்ளது.

தொடர் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதைப்போல் கன்னிப்பூ நெல் அறுவடை பணியையும் தொடர முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT