செங்கோட்டை அருகே நவீன தொழில்நுட்பத்தில் இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி பணி நடைபெறுகிறது. 
தமிழகம்

சாகுபடி செலவு குறைவு, உற்பத்தி அதிகரிப்பு: திருந்திய நெல் சாகுபடிக்கு முக்கியத்துவம் - செங்கோட்டை அருகே 80 ஏக்கரில் தொடக்கம்

செய்திப்பிரிவு

செங்கோட்டை அருகே கொல்லம் சாலையில் 80 ஏக்கரில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி பணி நேற்று தொடங்கியது. 25 விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் திருந்திய நெல் சாகுபடி தொடங்கியுள்ளது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் நல்லமுத்து ராஜா முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் பாலச்சந்திரன் தலைமை வகித்து, சாகுபடி பணியை தொடங்கிவைத்தார்.

25% கூடுதல் மகசூல்

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, “உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திருந்திய நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பாரம்பரிய நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதை நெல் தேவைப்படும். நாற்றங்கால் அமைக்க 8 சென்ட் நிலம் தேவைப்படும்.

நவீன தொழில்நுட்பத்தில் ஏக்கருக்கு 7.50 கிலோ விதைநெல் போதுமானது. பாய்முறை நாற்றங்கால் மூலம் ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதுமானது. பாய் நாற்றங்காலை வீட்டிலேயே கூட அமைத்துக்கொள்ளலாம். அதிக விளைச்சல் தரும் ரகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 14-வது நாளில் நடவு செய்யப்படுகிறது. சதுர முறையில் ஒற்றை நாற்று நடவு செய்யப்படுகிறது. இதனால், இயந்திரம் மூலம் எளிதாக களை எடுக்கலாம். களைகள் அப்படியே நிலத்துக்குள் அழுத்தப்படுவதால், களையும் உரமாகிவிடும்.

இயந்திரம் மூலம் களை நீக்கப்படுவதால் மண் கிளறப்படுகிறது. இதனால், வேர்களுக்கு சத்து அதிகளவில் கிடைக்கும். வேர்களும் ஆழமாகச் செல்லும். மழையில் பயிர் சாய்வது தடுக்கப்படும். தண்ணீர் அதிகமாக தேவைப்படாது. தேவைக்கு ஏற்ப உரமிடுவதால், செலவுகள் அதிகரிக்காது. உற்பத்திச் செலவு குறைவதோடு, உற்பத்தி அதிகமாகும். பாரம்பரிய நடவு முறையில் கிடைக்கும் மகசூலை விட, நவீன தொழில்நுட்பத்தில் நடைபெறும் சாகுபடியில் 25 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்” என்றனர்.

SCROLL FOR NEXT