பாலேகுளி ஏரியில் இருந்து சந்தூர் ஏரி வரை கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த 700 சிறு விவசாயிகள் நிலம் மற்றும் மரங்களுக்கு இழப்பீடு கேட்டு அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் 75-க்கும் மேற்பட்ட முறை மனு அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து கால்வாய் மூலம் பாலேகுளி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியில் இருந்து சந்தூர் ஏரி வரை உள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் மொத்த தூரம் 13.8 கி.மீ. இக்கால்வாய் திட்டம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் பெறுகின்றன. 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில், கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த 700-க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் இழப்பீடு கேட்டு தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகின்றனர். அரசு இதுவரை தங்களுக்கு இழப்பீடு வழங்க வில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கேஆர்பி அணை நீடிப்பு உபரிநீர் இடது கால்வாய்(பாலேகுளி முதல் சந்தூர் வரை) பயன்பெறுவோர் சங்க தலைவர் சிவகுரு கூறியதாவது:
இக்கால்வாய் அமைக்க மாரிசெட்டி அள்ளி, வேலம்பட்டி, சென்றாம்பட்டி, என்.தட்டக்கல், காட்டுக்கொல்லை, அப்பு குட்டை, வீரமலை, தொப்பிடிகுப்பம், பட்டகப்பட்டி, சந்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 700 சிறு விவசாயிகளின் 99.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்கள், ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாமரங்கள், செடிகள், மாநாற்றுகள், மல்லிகை, முல்லை பூந்தோட்டங்களில் இருந்த செடிகள் அகற்றப்பட்டன.
இந்த திட்டத்துக்காக அளிக்கப்பட்ட நிலத்துக்கும், அகற்றப்பட்ட மரங்களுக்கும் இழப்பீடு கேட்டு 8 ஆண்டுகளாக தமிழக முதல்வருக்கு 35-க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, ஆட்சியரிடம் நேரடியாக 30 முறை மனு அளித்ததுடன், இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளோம். இதன் பயனாக நிலம், மரங்களுக்கான இழப்பீடு மதிப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
நிலம் வழங்கிய அனைவரும் சிறு விவசாயிகள். இதனால் அவர்கள் மீதமுள்ள நிலத்தை விற்க முடியாமலும், விவசாயம் மேற்கொள்ள முடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும், நிலம் வழங்கிய விவசாயிகள் சிலர் இறந்துவிட்ட நிலையில், பட்டா மாறுதல், வங்கிகளில் கடன் பெறுதல் ஆகியவற்றில் பெரும் தடை உள்ளது. எனவே, கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த 700 விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.