கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் ரசாயன நுரையுடன் வெளியேறுவதால் தண்ணீர் செல்லும் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரை சுத்தப்படுத்தி பயன்படுத்த நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து கடந்த இரு தினங்களாக விநாடிக்கு 800 கனஅடிக்கு மேல் உள்ளது. அணையின் பாதுகாப்பினைக் கருதி, அணையில் இருந்து விநாடிக்கு 700 கனஅடிக்கு மேல் தண்ணீர் ஆற்றிலும், பாசனக்கால்வாயிலும் திறந்துவிடப்படுகிறது.
இதன்படி, கெலவரப்பள்ளி அணையில் இருந்து நேற்று காலை பாசன கால்வாய்களில் 88 கனஅடி தண்ணீரும், ஆற்றில் 640 கனஅடி தண்ணீரும் மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது. கால்வாய் பகுதியில் மதகுகள் வழியே வெளியேறிய தண்ணீரில் அதிக அளவில் நுரை பொங்கத் தொடங்கியது. ரசாயனக் கழிவு கலந்த நீரால் ஏற்பட்ட நுரையால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது:
கர்நாடக மாநிலம் நந்திமலையில் இருந்து வரும் மழைநீர், பெங்களூரு மாநகரம் வழியாக ஒரத்தூர் ஏரிக்கு வருகிறது. அங்கிருந்து வழிந்தோடும் தண்ணீர், தூய்மைப்படுத்தப்படாமல் அப்படியே தமிழக எல்லையான கொடியாளம் வழியாக ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. இந்த தண்ணீரில் தொழிற்சாலை கழிவுகளும், சாக்கடை தண்ணீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், தண்ணீரில் மாசு ஏற்படுகிறது. இந்த தண்ணீரை கர்நாடக அரசு சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனுமில்லை.
இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, ஓசூர் மாநகராட்சி மூலம் நாள்தோறும் 1.50 கோடி லிட்டர் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோன்று தென்பெண்ணை ஆற்றில் 400 கிணறுகள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து மாவட்டத் தில் உள்ள அனைத்து பகுதி களுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாசு கலந்த தண்ணீரை ஆடு, மாடுகள் குடிப்பதால் அவற்றுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
இதனால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தென்பெண்ணையாற்று நீர் 5 மாவட்ட மக்களின் விவசாயம், நிலத்தடி நீர், குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரமாகும். எனவே, தமிழக அரசு கொடியாளம் அணை பகுதியில் தென்பெண்ணையாற்று நீர் முழுவதையும் சுத்திகரித்து அனுப்பிடும் வகையில் அதிநவீன சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும். இதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.