நடப்பு நிதி ஆண்டில் ஆடை ஏற்றுமதி 40 % அதிகரிக்கும் என்று, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் (ஏஇபிசி) தலைவர் ஏ.சக்திவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏ.இ.பி.சி. கவுன்சிலின் 41- வது ஆண்டு பொதுக்கூட்டம், காணொலிவாயிலாக நடைபெற்றது. இதில்அவர் பேசியதாவது:
நடப்பு நிதி ஆண்டில் ஆடை ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரிக்கும்வகையில் இலக்கு வைத்து, புதியமருத்துவ துணிகளில் அதிக கவனம் செலுத்துகிறோம். மொத்தஆடை ஏற்றுமதி, 15.4 பில்லியன் டாலரிலிருந்து 2020-21-ம் ஆண்டில் சுமார் 22 பில்லியன் டாலராக உயரும். அமெரிக்காவின் வர்த்தக சூழ்நிலை நன்றாக உள்ளது. அமெரிக்காவுடன் வரையறுக்கப்பட்ட வர்த்தக தொகுப்பில்கையெழுத்திட இந்தியா தயார் நிலையில் உள்ளதாக, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஏற்கெனவே அமெரிக்காவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (எஃப்.டி.ஏ.) கோரியுள்ளோம். இந்த வரையறுக்கப்பட்ட வர்த்தக தொகுப்பு, இருதரப்பும் விரும்பிய விதமாக இருக்கக்கூடும். ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவுடன் தற்போதுள்ள அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் முழுமையாக ஆய்வு செய்யுமாறு, மத்திய அரசிடம் கோரியுள்ளோம்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான எஃப்.டி.ஏ., ஆஸ்திரேலியாகனடாவுடன் சிஇபிஏ ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில், மூன்று ஆண்டுகளில் ஆடை ஏற்றுமதியை இரட்டிப்பாக்க உதவும். கரோனா வைரஸ் பரவிய சில மாதங்களில், குறுகிய காலத்துக்குள் 2-வது பெரிய மருத்துவ ஜவுளி உற்பத்தியாளராக இந்தியா மாறியது.
மருத்துவ ஜவுளிகள், ஆடைத் தொழிலுக்கான புதிய ஆதாரமாக மாறியுள்ளது. பல பிபிஇ பொருட்களுக்கான ஏற்றுமதி தடையை அரசு நீக்கியுள்ளது. உலகளாவிய சந்தையில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திறவுகோல் எம்.எம்.எப்.தான். அதன் வடிவமைப்பு மற்றும் செயலாக்கத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
பல்வேறு ஃபைபர் தளம், தொழில்நுட்பங்கள், செயலாக்கம் மற்றும் மாதிரி மேம்பாடு குறித்து விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தேவைப்படும். இந்த நடவடிக்கைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவுவதற்காக, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில், பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். அமைப்பின் தெற்கு பிராந்திய நிர்வாக உறுப்பினர்களாக பரமசிவம், அஜய் அகர்வால் தேர்வு செய்யப் பட்டனர்.