ஈரோட்டில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர். 
தமிழகம்

‘கலைஞரின் தொண்டர்களைக் காப்பாற்று’- அழகிரிக்கு ஆதரவாக ஈரோட்டில் போஸ்டர்

செய்திப்பிரிவு

ஈரோடு நகரப் பகுதியில் மு.க. அழகிரிக்கு ஆதரவாக திடீர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் அமைச்சருமான மு.க.அழகிரிக்கு ஆதரவாக, ஈரோடு நகர் பகுதியில், ‘கருங்கல்பாளையம் பகுதி திமுக’ என்கிற பெயரில், ‘மெளனத்தைக் கலைத்து விட்டு கலைஞரின் தொண்டர்களைக் காப்பாற்று’ என்கிற வாசகங்களுடன் மு.க.அழகிரி படங்களுடன் சுவரொட்டிகள் நேற்று ஒட்டப்பட்டன. திமுக பொதுக்குழுக்கூட்டம் நடக்கவுள்ள நிலையில், திடீரென இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரியின் பெயரைப் பயன்படுத்தி சிலர் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த இத்தகைய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த குரு பெரியசாமி என்பவர் தற்போது திமுகவில் இல்லை. அவர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை’ என்றனர்.

SCROLL FOR NEXT