அமெரிக்காவின் ‘வோர்ல்டு ஓபன் -2020’ பட்டத்திற்காக, இணையதளம் வாயிலாக நடந்த சதுரங்கப்போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பி.இனியன் முதலிடம் பெற்றார்.
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் 1973-ம் ஆண்டு முதல், ‘வோர்ல்டு ஓபன்’ சதுரங்கப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக, இணையதளம் வாயிலாக, ‘வோர்ல்டு ஓபன் - 2020’ சதுரங்கப் போட்டிகள் ஆகஸ்ட் 7 முதல் 9-ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி.இனியன், இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.
ஒவ்வொரு நாளும் 3 சுற்றுகள் வீதம், 3 நாட்கள் கிளாசிக் நேரக் கட்டுப்பாட்டில் 9 சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஸ்பெயின், இஸ்ரேல், கியூபா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 122 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பி.இனியன், முதல் ஆட்டத்தில் சமன் செய்ததில் தொடங்கி, தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் சர்வதேச சதுரங்க வீரர்களை வென்று 7.5 புள்ளிகள் பெற்றார்.
ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் சனன் சுஜிரோவ் மற்றும் அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டர் குசினோவ் காதிர் ஆகியோருக்கு எதிரான இறுதி ஆட்டங்கள் சமனில் முடிந்தன. போட்டிகளின் இறுதியில், கிராண்ட் மாஸ்டர் இனியன் மற்றும் சனன் சுஜிரோவ் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளைப் பெற்ற நிலையில், சிறந்த டை- பிரேக்கில் இந்திய வீரர் இனியன் முதல் இடம் பிடித்தார். போட்டிகள் ஆக.9-ம் தேதி முடிவடைந்த நிலையில், அமைப்பாளர்களால் முழுமையான சோதனைகளுக்குபின்னர், போட்டி முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க நேரப்படி போட்டி நடந்த நிலையில், ஈரோட்டில் இருந்து இணையம் மூலம் இரவு 9.30 முதல் காலை 6 மணி வரை போட்டியில் இனியன் பங்கேற்றார்.