சத்துணவில் மாணவர்களுக்கு முட்டை வழங்க அனுமதி அளித்துஅரசாணை வெளியிடப்பட்டுள் ளது.
தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வந்த 49 லட்சத்து 85 ஆயிரத்து 335 மாணவ,மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கரோனா ஊரடங்கால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. இதற்கிடையே, பள்ளிகள் திறக்கும் வரை 1 முதல்8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு அரசி, பருப்பு ஆகிய உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சத்துணவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சத்துணவில் மாணவ, மாணவிகளுக்கு முட்டைவழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ’’தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் உலர் உணவு பொருட்களுடன் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு மாணவருக்கு 10 முட்டை வழங்க அனுமதிவழங்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையினால் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும்போதே உலர்உணவு பொருட்கள் மற்றும் முட்டைகளையும் வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.