தமிழகம்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்புக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி

கி.மகாராஜன்

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த அசோகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஜேஇஇ மற்றும் மருத்துவ படிப்பில் சேர நீட் ஆகிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் பலர் தேசிய அளவிலான கல்லூரிகளில் சேர்வர். அதற்குப் பிறகே தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு முதல்நிலை பெறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக செப்டம்பர் முதல் வாரத்தில் ஜெஇஇ தேர்வும், செப்டம்பர் 13-ல் நீட் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு வெளிவருவதற்கு முன்பு செப். 17-ல் தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேசிய நுழைவுத் தேர்வு முடிவுக்கு பிறகு பலர் தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளில் சேரும் நிலையில் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் நிரப்பப்பட்ட இடங்கள் காலியாகும் சூழல் ஏற்படும். இந்த காலியிடங்கள் நிரப்பப்படாமல் போக வாய்ப்புள்ளது. இந்த காலியிடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை.

எனவே ஜெஇஇ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவதால் பொறியியல் கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும், அதுவரை தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளில் சேரும் போது, முந்தை கல்லூரிகளில் காலியிடம் ஏற்படுவது இயல்பானது. அந்த காலியிடங்கள் எவ்வாறு நிரப்பப்படுகிறது என்பதை மனுதாரர் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அதில் திருப்தி ஏற்படாத நிலையில் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT