முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளி யான அட்டாக் பாண்டியை இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் போலீஸார் நேற்று கைது செய்தனர். இன்று அவர் மதுரைக்கு கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான பொட்டு சுரேஷ், மு.க. அழகிரியிடம் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார். 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது. மதுரையில் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது. இதற்கு அழகிரியின் நடவடிக்கைகளே காரணம் என திமுகவில் விமர்சனம் எழுந்தது.
அழகிரியை மக்களும், கட்சி யினரும் நெருங்கவிடாமல் செய்ததும், பொட்டு சுரேஷ் மற்றும் அட்டாக் பாண்டி உள்ளிட்ட சிலரது நடவடிக்கைகளும் மதுரை மாவட்டத்தில் திமுகவின் பின்ன டைவுக்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டது. இதன் பின்னரும், அழகிரியிடம் பொட்டு சுரேஷின் செல்வாக்கு குறையவில்லை. ஆனால், அட்டாக் பாண்டியால் முன்புபோல அழகிரியிடம் நெருங்க முடியவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது.
இச்சூழ்நிலையில், 2013 ஜனவரி 31-ம் தேதி மதுரை டிவிஎஸ் நகரில், கும்பலால் பொட்டு சுரேஷ் கொலை செய்யப் பட்டார். இதுதொடர்பாக அட்டாக் பாண்டி உட்பட 18 பேர் மீது சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்கு பதிந்தனர். அட்டாக் பாண்டி யின் உறவினர் விஜயபாண்டி உட்பட 17 பேர் கைது செய்யப் பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வந்தனர். மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
அட்டாக் பாண்டியை கைது செய்ய மதுரை சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா தலைமை யில் 10 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. போலீஸார் தேடும் தகவல் அட்டாக் பாண்டிக்கு முன்கூட்டியே கிடைத்ததால், பலமுறை சிக்காமல் தப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலை யில், சில பத்திரிகைகளுக்கு அட்டாக் பாண்டியே தொடர்பு கொண்டு பேசுவதாக தகவல் வெளி யானது. நீதிமன்றங்களில் அவரது தரப்பில் பலமுறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ததும் தொடர்ந்தது. இதற்காக வழக்கறிஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் சிலருடன் அட்டாக் பாண்டி தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கண்காணித்த போலீஸாராலும், அவரது இருப் பிடத்தை கண்டறிய முடியாத நிலை நீடித்தது.
மும்பையில் திடீர் கைது
இந்நிலையில், அட்டாக் பாண்டியை தேடப்படும் குற்றவாளி என நீதிமன்றம் 2014 மே மாதம் அறிவித்தது. இதனால் அவரைக் கைது செய்ய போலீஸார் மீண்டும் முயற்சி எடுத்தனர். தனிப்படை கலைக்கப்பட்டாலும், துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திரா, சுப்பிரமணியபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கோட்டைச்சாமி, சார்பு ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் அட்டாக் பாண்டியை ரகசியமாக கண் காணித்து வந்தனர். அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் உட்பட பலரது போன் எண்களை கண் காணித்தபோது, அவர் மும்பை யில் இருப்பது தெரியவந்தது.
நேற்று காலை, மும்பையின் நவி மும்பை பகுதியில் அட்டாக் பாண்டி பதுங்கி இருப்பதை சாதாரண உடையில் இருந்த போலீஸார் உறுதிப்படுத்தினர். அவரிடம் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்ததால், போலீஸார் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர் தங்கியிருந்த கட்டிடத்தைச் சுற்றி வளைத்தனர். அட்டாக் பாண்டியை துப்பாக்கி முனையில் பிடித்து போலீஸார் கைது செய்தனர்.
மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்
நேற்று பிற்பகல்1 மணி அளவில் மும்பையிலுள்ள நீதிமன்றத்தில் அட்டாக் பாண்டியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அங்கிருந்து உத்தரவை பெற்று, மதுரைக்கு அழைத்துவரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
காவல் ஆணையர் உறுதி
அட்டாக் பாண்டி கைது குறித்து, மதுரை நகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறுகையில், ‘சட்டரீதியான நடவடிக்கைகளுக்குப் பிறகு அட்டாக் பாண்டி மதுரைக்கு கொண்டுவரப்படுவார். இங்கு அவரிடம் முறைப்படி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும்’ என்றார்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான 17 பேரும், அட்டாக் பாண்டி சொல்லித்தான் இக்கொலையை செய்தோம் என்றனர். இதனால் பொட்டு சுரேஷ் கொலைக்கான உண்மையான காரணம் அட்டாக் பாண்டிக்கு மட்டுமே தெரியும். இக்கொலை யின் பின்னணியில் முக்கியப் பிரமுகர்கள் யாரும் உள்ளனரா என்பது உள்ளிட்ட பரபரப்பான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.