தமிழகம்

அவகாசம் முடிந்தது: சிறப்பு கவுன்ட்டர்களில் 12,000 பேர் வருமானவரி கணக்கு தாக்கல்

செய்திப்பிரிவு

வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. சென்னையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கவுன்ட்டர்களில் இதுவரை 12 ஆயிரம் பேர் வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

2014-15ம் நிதியாண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் 34 சிறப்பு கவுன்ட்டர்கள் கடந்த மாதம் 26-ம் தேதி திறக்கப்பட்டன. மாத சம்பளம் பெறுபவர்கள், ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ள ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் இந்த கவுன்ட்டர்களில் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்தனர். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக கவுன்ட்டர்களும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நேற்று முடிவடைந்தது. கடைசி நாளான நேற்றும் ஏராளமானோர் தங்கள் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்தனர்.

சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் 12 ஆயிரம் பேர் வருமானவரிக் கணக்கை நேரடியாக தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 35 ஆயிரமாக இருந்தது. ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், ரீஃபண்ட் பெறுபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே தாக்கல் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டதால், இந்த ஆண்டு நேரில் வந்து தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று வருமானவரித் துறை அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT