தமிழகம்

கடற்கொள்ளையர் சுட்டதில் இறந்த குமரி மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

செய்திப்பிரிவு

பக்ரைன் எல்லையில் கடற்கொள்ளையர் சுட்டதில் இறந்த குமரி மாவட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் மகன் ஆன்டனி அருள் அனிஷ். இவர், கத்தார் நாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மீன்பிடி படகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுடன் பகரைன் நாட்டின் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா மீனவர் ஆன்டனி அருள் அனிஷ் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தார். தொடர்ந்து, ஆன்டனியின் உடலை அவரது சொந்த ஊருக்கு விரைவில் கொண்டு வரவும், அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் இருந்து குடும்பத்திற்கு இறுதி பணப் பயன்களை பெற்றுத் தர இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

மேலும், மீனவர் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆகஸ்ட் 10-ம் தேதி அறிவித்தார்.

அதன்படி மீனவர் ஆன்டனி அருள் அனிஷ் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

காசோலையை பெற்றுக் கொண்ட ஆன்டனியின் குடும்பத்தினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT