தேனி மாவட்டம் சக்கம்பட்டியில் கோடை காலத்தில் காட்டன் புடவைகள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டன. ஊரடங்கு காரணமாக ரூ.10 கோடி மதிப்பிலான இப்புடவைகள் தேக்கம் அடைந்துள்ளன.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்பு லாபுரம், கொப்பையம்பட்டி, எஸ்எஸ்.புரம், முத்து கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் காட்டன் சேலைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படு கின்றன. இத்தொழிலில் சுமார் 5,000 நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தியாகும் சேலைகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
பிச்சைமணி நெசவாளர்கள் நெய்த சேலைகளை சிறு வியாபாரிகள் வாங்கிச் சென்று பிரபல கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச சேலைகளும் இங்கு அதிக அளவில் நெய்யப்படுகின்றன. ஒரு தறியில் தினமும் 5 சேலைகள் வரை நெய்ய முடியும். இதனால் வீட்டில் இருந்தவாறு பலரும் பொருளீட்ட முடிந்தது.
பொதுவாக கோடை காலத்தில் காட்டன் சேலை விற்பனை அதிகமாக இருக்கும். இதற்காகக் கடந்த ஜனவரி முதல் நெசவாளர்கள் அதிக அளவில் புடவை, வேட்டிகளை உற்பத்தி செய்து வைத்திருந்தனர். ஆனால், கரோனா ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வு அளித் தபோதும் நிலைமை சீராக வில்லை. தினமும் 5 சேலை கள் நெய்த நிலையில் தற்போது வாரத்துக்கே 5 சேலைகள்தான் நெய்ய
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். இது குறித்து நெசவாளர் பிச்சைமணி கூறியதாவது: சுங்குடி, பேப்பர் காட்டன் உள்ளிட்ட ரகங்களை உற்பத்தி செய்கிறோம். இப்பகுதிகளில் தினமும் ரூ.15 லட்சம் மதிப்பிலான சேலை, வேட்டிகள் தயாராகின்றன. ரகத்துக்கு ஏற்ப ஒரு புடவைக்கு ரூ.90, 100 என்று எங்களுக்குக் கூலி கிடைக்கும்.
கடைகள் மூடப்பட்டதால் விற்பனை பாதிக்கப்பட்டு ரூ.10 கோடி மதிப்பிலான சேலைகள் தேங்கியுள்ளன. கோடை விற்பனையை எதிர்பார்த்து அதிக அளவில் உற்பத்தி செய்தோம். தற்போது பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் விற்பனை சீராக வாய்ப்பில்லை. வரும் தீபாவளி நேரத்தில் நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார்.