'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் மாலையிட்டு மரியாதை செலுத்துவோம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 4) வெளியிட்ட அறிக்கை:
"இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் சமரசமற்றவரும், ஆங்கிலேயருக்குப் போட்டியாக உள்நாட்டு கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தியவருமான வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவிருக்கிறது. தேச விடுதலைக்காக உடலளவிலும், பொருள் அளவிலும் ஏராளமான தியாகங்களைச் செய்த வ.உ.சிதம்பரனார் அனைத்துத் தரப்பினராலும் போற்றப்பட வேண்டியவர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த வ.உ.சிதம்பரனார் பட்டப்படிப்பையும், சட்டப்படிப்பையும் படித்துத் தேர்ந்தார். மிகச்சிறந்த வழக்கறிஞராக உருவெடுத்த அவர், ஏழைகளுக்காக இலவசமாக வாதிட்டவர். தேசியகவி பாரதியாருடன் இளம் வயதில் ஏற்பட்ட நட்பு காரணமாக விடுதலை இயக்கத்தில் தம்மை சிதம்பரனார் ஈடுபடுத்திக் கொண்டார்.
காந்தியடிகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரனார், தென் மாவட்டங்களில் தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தார். மக்களின் உரிமைகளுக்காக போராடி அனைவரையும் தன்பக்கம் ஈர்த்த அவர், ஆங்கிலேய ஆட்சியர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவரது வளர்ச்சி ஆங்கிலேயர்களுக்கு அச்சமூட்டியது.
ஆங்கிலேயர்களின் வணிக சாம்ராஜ்யத்தை ஒழிக்கும் நோக்குடன் 1906-ம் ஆண்டிலேயே உள்நாட்டு கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அவரது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத வெள்ளையர்கள் அடுத்த இரு ஆண்டுகளில் அவரை தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் செக்கு இழுத்த கொடுமை குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், அது அவருக்கு வழங்கப்பட்ட மாற்று தண்டனை தான். அதைவிட கொடுமையான தண்டனைகளையும் சிறையில் வ.உ.சிதம்பரனார் அனுபவித்துள்ளார்.
சிறையில் அவருக்கு சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்றும் பணி முதலில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணியின் போது, அவரது கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்திருக்கிறது. எதற்கும் கலங்காதவரான வ.உ.சி அந்த தண்டனை மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை எண்ணி கண்ணீர் வடித்துள்ளார். சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்ற அவரது உடல்நிலை இடம் தராத நிலையில் தான் அவருக்கு மாற்று தண்டனையாக செக்கு இழுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
சிறையிலும், சிறைக்கு வெளியிலும் ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்த வ.உ.சிதம்பரனார், தமது சொத்துகள் அனைத்தையும் இழந்தார். சிதம்பரனார் எந்த மக்களுக்காக போராடினாரோ, அந்த மக்களே அவரது கடைசி காலத்தில் அவருக்குத் துணையாக நிற்கவில்லை என்பது தான் பெரும் சோகமும், வருத்தமளிக்கும் உண்மையுமாகும்.
வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு ஆகும். அதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், பாமகவைச் சேர்ந்தவர்கள், அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.