தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் நடுவே ஓட்டை விழுந்து ஏற்பட்டுள்ள சேதம் | படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

கட்டப்பட்ட 7 ஆண்டுகளிலேயே அடிக்கடி சேதமடையும் வல்லநாடு ஆற்றுப் பாலம்: தரம், முறைகேடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த கோரிக்கை

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கேகட்டப்பட்ட பாலம் சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சேதமடைகிறது. இதனால் பாலம் கட்டுமானத்தின் தரம் குறித்து விரிவாக ஆய்வு நடத்துவதுடன், முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நான்குவழிச் சாலை

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2013-ம் ஆண்டு முடிவடைந்து வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

இந்தச் சாலையில் வல்லநாடுபகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்தப் பாலத்தைக் கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

7 ஆண்டுகளிலேயே சேதம்

கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளேயான நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இந்தப் பாதையில் 108 நாட்கள் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ரூ.3.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாலம் முழுவதுமாக சீரமைக்கப்பட்டது.

சீரமைக்கப்பட்ட 3 ஆண்டுகளில் மீண்டும் பாலத்தில் இரண்டு இடங்களில் கடந்த மார்ச் மாதம் பெரிய அளவில் ஓட்டைகள் விழுந்தன. இதனால் இந்த வழியாக வாகனப் போக்குவரத்து கடந்த 14.03.2020 முதல் நிறுத்தப்பட்டது. 6 மாதங்களாகியும் இன்னும் பாலம் சீரமைக்கப்படவில்லை.

இதனால் வாகனங்கள் கடந்த 6 மாதங்களாக ஒருவழிப் பாதையில் செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இந்தப் பாலத்தை கடக்க வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர்.

ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்வதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடக்கும் நிலை உள்ளது.

கட்டுமான தரம் கேள்விக்குறி

இந்த பாலத்துக்கு அருகில் உள்ள சுமார் 125 ஆண்டு பழமையான பாலம் சிறிய சேதம் கூட ஏற்படாமல் இன்றும் கம்பீரமாக உள்ளது. ஆனால், புதிய பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சேதமடைவதால் அதன் தரம் குறித்துசந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சாலை பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆ.சங்கர் கூறும்போது, ‘‘போக்குவரத்தை எளிதாக்க மக்கள் வரிப்பணத் தில் கட்டப்பட்ட வல்லநாடு பாலம் சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சேதமடைந்து வருவதன் மூலம் சரியாக கட்டப்படவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் பாலத்தை சீரமைக்கும் வரை சுங்கவரி வசூலிக்கக்கூடாது. பாலத்தின் கட்டுமானம் குறித்து விரிவான ஆய்வு நடத்துவதுடன், இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும் உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

10 நாட்களில் நிபுணர் குழு ஆய்வு

இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் பி.சங்கர் கூறும்போது, ‘‘சேதமடைந்துள்ள வல்லநாடு தாமிரபரணி பாலத்தை ஆய்வு செய்யுமாறு மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

கரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக அவர்களால் வர இயலவில்லை. தற்போது ஆய்வு நடத்த வருவதாக தகவல் அனுப்பியுள்ளனர். இன்னும் 10 நாட்களில் அந்நிறுவன நிபுணர் குழுவினர் வந்து வல்லநாடு பாலத்தை ஆய்வு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அவர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் பாலத்தில் எந்த மாதிரியான சீரமைப்பு பணிகளை செய்வது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்யும். விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT