வாகன காப்பீட்டை புதுப்பிக்கும் போது மாசு கட்டுப்பாடு சான்று கட்டாயம் என்ற இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு குறித்து காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதிகரித்துவரும் வாகனங் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன புகையால் ஏற்படும் காற்று மாசும் அதிகரித்துவருகிறது. இவ்வாறு காற்று மாசடைவதை தடுக்கும் நோக்கில், ‘மாசு கட்டுப்பாடுசான்று இல்லாத வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்கக்கூடாது’ என 2017 ஆகஸ்ட் 10-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான ஐஆர்டிஏஐ, அனைத்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கடந்த ஆகஸ்ட் 20-ம்தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், ‘வாகனம் வெளியிடும் புகையின் அளவு அரசு விதிமுறைப்படி கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தெரியப்படுத்தும் சான்று இல்லாத வாகனங்களுக்கு காப்பீட்டை புதுப்பிக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு நடைமுறையில் சாத்தியமில்லை என்கின்றனர் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: மோட்டார் வாகன விதிகளின்படி வாகன உரிமையாளர்கள் கண்டிப்பாக மாசு கட்டுப்பாடு சான்றை பெற்றிருக்க வேண்டும். அந்த சான்றை 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மாசுகட்டுப்பாடு சான்று இல்லாமல்தான் வாகனங்களை இயக்கிவருகின்றனர். காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது 5 சதவீதம் பேரிடம்கூட மாசு கட்டுப்பாடு சான்று இருப்பதில்லை. எனினும், அவர்களுக்கு காப்பீடு மறுக்கக்கூடாது என்பதால், ‘எனது வாகனத்துக்கு முறையான மாசு கட்டுப்பாடு சான்று உள்ளது’ என்ற உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெற்றுவிட்டு காப்பீடு அளித்து வருகிறோம்.
இதற்கிடையே மாசு கட்டுப்பாடு சான்று இல்லாதவர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி விளக்கம் அளித்துள்ள ஐஆர்டிஏஐ, ‘மாசு கட்டுப்பாடு சான்று இல்லையென்ற காரணத்தைக் காட்டி வாகன காப்பீட்டை நிராகரிக்கக் கூடாது’ என்று தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, வாகனங்களுக்கு மாசுகட்டுப்பாடு சான்று பெறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து போலீஸாரின் பொறுப்பு. இந்தப் பொறுப்பை காப்பீட்டு நிறுவனங்களின் வசம் ஒப்படைப்பது உத்தரவின் நோக்கத்தை நிறைவுசெய்யாது" என்றனர்.
பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு
தமிழகத்தில் சுமார் 2.97 கோடி வாகனங்கள் இயங்குகின்றன. ஆனால், சுமார் 350 வாகன புகை பரிசோதனை மையங்கள் மட்டுமே உள்ளன. அனைத்து வாகனங்களுக்கும் மாசு கட்டுப்பாடு சான்று வழங்க இந்த எண்ணிக்கை போதுமானதல்ல என்பதால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டதற்கேற்ப அண்மையில் புதிய உத்தரவு ஒன்றை போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் பிறப்பித்துள்ளார். அதில், “வாகன விற்பனை நிறுவனங்கள் தங்களின் அங்கீகரிக்கப்பட்ட பழுதுபார்ப்பு மையங்களில் மாசு கட்டுப்பாடு சான்றை அளிப்பதற்கான வசதியை விரைவில் ஏற்படுத்த மண்டல போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, அனைத்து பெட்ரோல் நிலையங்களில் இந்த வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.