வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக செப்டம்பர் 20-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடங்கி அக்டோபர் 2-ம் தேதி திருச்சியில் நிறைவு செய்கிறார்.
இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட் டிருப்பதாவது:
வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், வெளிப்படையான நிர்வாகம் என்ற உன்னதமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதியின் ஆலோசனைப்படி மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற பயணத்தை செப்டம்பர் 20-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நாகர்கோவிலில் தொடங்குகிறார்.
செப்டம்பர் 20, 21 கன்னி யாகுமரி, 22- திருநெல்வேலி, 23 தூத்துக்குடி, 24 விருதுநகர், 25 மதுரை புறநகர், 26 மதுரை மாநகர், 27 தேனி, 28 திண்டுக்கல், 29 சிவகங்கை, 30 ராமநாதபுரம், அக்டோபர் 1 புதுக்கோட்டைக்கு செல்லும் அவர் 2-ம் தேதி திருச்சியில் பயணத்தை நிறைவு செய்கிறார். நமக்கு நாமே பயணத்தின் 2-ம் கட்ட, 3-வது கட்ட பயண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த பயணத்தின்போது கடந்த நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகமும், தமிழக மக்களும் படும் துயரங்கள், கடந்த கால திமுக ஆட்சியின் சாத னைகள் ஆகியவற்றை பொது மக்களுக்கு ஸ்டாலின் எடுத்துரைப் பார் என அதில் கூறப்பட்டுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த மே 23-ம் தேதி மதுரை, ஜூலை 19-ம் தேதி கடலூரில் நீதி கேட்கும் பேரணி, பொதுக்கூட்டம், செப்டம்பர் 5-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விடியல் மீட்பு பேரணி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் அவர் 13 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.