தமிழகம்

பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் செப்.8-ம் தேதி அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வரும் 8-ம் தேதி நடக்க உள்ளது.

கரோனா பரவல் காரணமாக தமிழக சட்டப்பேரவை கடந்த மார்ச் 24-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 14-ம்தேதி காலை 10 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கும் என்று பேரவைச் செயலர் கே.சீனிவாசன் கடந்த 1-ம் தேதி அறிவித்தார்.

சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த தற்போதைய கூட்ட அரங்கில் இடவசதி இல்லாததால், சென்னை கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் உள்ளஅரங்கில் பேரவைக் கூட்டத்தைநடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்க, வரும் 8-ம் தேதி காலை 11 மணிக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடுகிறது.

இதில் ஆளுங்கட்சி சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு கொறடா எஸ்.ராஜேந்திரன் ஆகியோரும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கொறடா அர.சக்கரபாணி, காங்கிரஸ் சார்பில் கே.ஆர்.ராமசாமி, ஐயுஎம்எல் சார்பில் முகமது அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்கின்றனர். பேரவைக் கூட்டம் பெரும்பாலும் 4 நாட்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT