தமிழகம்

2-ம் கட்ட ஆராய்ச்சிக்காக ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் ‘கோவிஷீல்டு’ மருந்து சென்னை வந்தது: கரோனா தடுப்பு மருந்து பணிகள் தீவிரம்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு 2-ம் கட்ட ஆராய்ச்சிக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ மருந்து சென்னைக்கு வந்தது.

கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் ‘பாரத்பயோடெக்’ நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தை 2-ம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்துவதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தின் முதல் கட்ட ஆராய்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில், 2-ம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசியை பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் (டிசிஜிஐ)சென்னையைத் தேர்வு செய்துள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தலா150 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதில் முதல்கட்டமாக 200டோஸ் தடுப்பு மருந்து சென்னை வந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட, கரோனா வைரஸ் தொற்று ஏற்படாத நபர்களுக்கு தடுப்பு மருந்தின் முதல் டோஸ் வரும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படவுள்ளது. ஒரு மாதத்துக்குள் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பு மருந்து போடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திஉருவாகிறதா என 6 மாதங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். 2-ம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து 3-ம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு, தடுப்புமருந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT