கரோனா வைரஸ் தொற்றுப் பரவுதலைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
’’மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு முதல்வர் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார். தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு வெளியிட்டுள்ள நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், பொது இடங்களுக்குச் செல்லும்போதும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளும்போதும் தகுந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள், வங்கிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் கைகளைச் சுத்தம் செய்ய சோப்புக் கரைசல் அல்லது கைகழுவும் திரவம், கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இதுநாள் வரை பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முகக்கவசம் அணியாத தனிநபர்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களிடமிருந்து ரூ.1,85,67,117 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத தனிநபர் அல்லது தொழில், வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது அபராதம் அல்லது அபராதத்துடன் மூடி சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.