கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு இந்து இளைஞர் முன்னணி சார்பில் கல்லூரி கல்வித்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்து இளைஞர் முன்னணி திருநெல்வேலி கோட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரா, இணை ஒருங்கிணைப்பாளர் க. பிரம்மநாயகம், சுடலை, ரமேஷ் கண்ணன், முகேஷ் உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்:
கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.
அதேநேரத்தில் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் விண்ணப்பிக்காமல் விட்டுவிட்ட மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் கல்லூரியில் புதிதாக முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கான நுழைவு கட்டணத்தை எளிய தவணை முறைகளில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும்.
கரோனா பாதிப்பால் வருமானம் இழந்து கட்டணம் செலுத்த இயலாத 3-ம் ஆண்டு அல்லது இறுதி பருவத் தேர்வு எழுதுகின்ற தொழில்நுட்ப, மருத்துவ கல்லூரி மாணவர்களின் பருவத்தேர்வு கட்டணங்களை அரசே ஏற்று அவர்களுக்கு சலுகை காட்ட முன்வர வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.