வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும் என பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் பங்கேற்றுப் பேசும்போது, தற்போது தேர்தல் களத்தில் நிற்கும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
2021 தேர்தலை முடிவு செய்யும் சக்தியாக பாஜக இருக்கும். 12 கோடி தொண்டர்களையும், 300 எம்பிக்கயும் கொண்ட உலகில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உள்ளது.
கருப்பர் கூட்டத்துக்கு துணை நின்ற திமுகவை வரும் தேர்தலில் பாஜக வதம் செய்ய வேண்டும். 2021 தேர்தலில் புனித ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடி பறக்கும் வகையில் இளைஞரணி தொண்டர்கள் செயல்பட வேண்டும் எனப் பேசினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த ஆக.31-ல் பாஜக இளைஞரணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட தீர்மானத்தின்படி செப்.13-ம் தேதி நீட் தேர்வு எழுதும் பேருந்து வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு பாஜக சார்பில் இலவச போக்குவரத்து வசதி செய்யப்படும்.
இதற்கான உதவி தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டு செப்.11 மாலை 6 மணி வரை மாணவர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழி கொள்கை விசயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஆனால் திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிகள் கற்றுத்தரப்படுகிறது.
ஆனால் ஏழை மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் இரட்டை மொழி கற்றுத்தரப்படுகிறது. 2016 தேர்தலைவிட 2021- தேர்தலில் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும். புதிதாக சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தகுதியானவர் என்பதால் மாநில துணைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் சண்முக ராஜேஸ்வரன், மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்ட துணைத்தலைவர் குட்லக் ராஜேந்திரன், இளைஞரணி மாநில துணைத் தலைவர் ஆத்ம கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.