கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பைப் பதிவு செய்த ஜிப்மர் மருத்துவர்கள். 
தமிழகம்

ஜிப்மர் மருத்துவரைச் செவிலியர் தாக்கியதாகப் புகார்: நடவடிக்கை கோரி கருப்புப் பட்டை அணிந்து மருத்துவர்கள் எதிர்ப்பு

செ.ஞானபிரகாஷ்

ஜிப்மரில் மருத்துவர் ஒருவரை ஆண் செவிலியர் தாக்கிய சம்பவம் தொடர்பாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் அனைத்து மருத்துவர்களும் இன்று கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர்.

புதுவை ஜிப்மரில் கரோனா தொற்றாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 31-ம் தேதி கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர் ஆதேன் குணசேகரனுக்கும், ஆண் செவிலியர் செந்தில் என்பவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில், மருத்துவரைத் தாக்கியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜிப்மர் மருத்துவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக நேற்று ஜிப்மர் நிர்வாக அலுவலகம் முன்பு ஒன்று கூடினர். நிர்வாக அலுவலகப் படிக்கட்டுகளில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் பணிகளைப் புறக்கணித்துத் திரண்டனர்.

இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மருத்துவரைத் தாக்கியவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும், 24 மணி நேரத்திற்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மருத்துவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து இன்று (செப். 3) தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மருத்துவரைத் தாக்கிய செவிலியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரோனா பணிகளைச் செய்தவாறு தங்கள் எதிர்ப்பை நிர்வாகத்துக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க, நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT