கோத்தகிரி வனப்பகுதியில் விதிகளை மீறி மரங்களை வெட்டுபவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5,000 வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார், நீலகிரியில் குடியேறிய பஞ்சாப்பைச் சேர்ந்த கரண் தீப் சிங். இவர் தனது தோட்டத்தில் மூங்கில் நடவு செய்து அதிக லாபம் ஈட்டி வருகிறார்.
நீலகிரி மாவட்டம் முழுக்க முழுக்க அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு நிலவும் இதமான காலநிலை மற்றம் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள், மலைகள், வனப்பகுதியை நேசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியேறியிருக்கிறார், கரண் தீப் சிங். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் விமானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி உதகையில் உள்ள தனியார் சர்வதேசப் பள்ளியில் பயின்றவர். மனைவியின் விருப்பத்திற்காக பணி ஓய்வுக்குப் பிறகு இங்கேயே குடியேறிவிட்டார். பணி ஓய்வில் வந்த பணத்தை வைத்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஆடுதுறை என்ற பகுதியில் தனக்காக ஒரு வீடு மற்றும் அதனைச் சுற்றி சிறிய அளவிலான நிலத்தையும் வாங்கியுள்ளார்.
புதர் மண்டிக் கிடந்த அந்த இடத்தைத் தற்போது மூங்கில் தோட்டமாக மாற்றியுள்ளார். அதை விற்பனை செய்து அதிக லாபமும் ஈட்டி வருகிறார்.
இது தொடர்பாக, கரண் தீப் சிங் கூறுகையில், "புதர்மண்டிக் கிடந்த தோட்டத்தை என்ன செய்வது என யோசித்தேன். அரசு தோட்டக்கலை பண்ணையில் ரூ.100-க்கு மூங்கில் நாற்றுகள் வாங்கி எனது நிலத்தில் தோட்டம் அமைத்தேன்.
பராமரிக்க அதிக செலவு இல்லாததால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மூங்கில்கள் நன்றாக வளர்ந்து விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் மூங்கில்களை அனைத்துத் தரப்பு மக்களும் நடவு செய்து லாபம் ஈட்டலாம்.
தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட மாவட்டங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வந்து இந்த மூங்கில்களை வாங்கிச் செல்கின்றனர். ரூ.100-க்கு வாங்கிய மூங்கில்கள், தற்போது 40 ஆயிரத்துக்கு மேல் விற்பனை ஆகிறது" என்கிறார், பெருமிதமாக.
மூங்கில்களைக் கொண்டு ஏணி, கோழிக் கூண்டு, வளர்ப்பு பறவை கூண்டு, தோட்ட வேலிகள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. மூங்கில் வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
வனத்தின் மீது அதிக அக்கறை கொண்ட இவர், தனது இல்லம் அமைந்துள்ள பகுதி மற்றும் பாரதியார் நகர், பெரியார் நகர் உட்பட்ட பகுதிகள் அதிக வனப்பகுதி கொண்டதால் வனத்தைக் காப்பாற்ற, கிராமப் பகுதிகளில் மரங்களை யாரேனும் வெட்டுவது குறித்துத் தகவல் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிப்பதாக நோட்டீஸ் அச்சிட்டு அப்பகுதியில் விநியோகித்து வருகிறார்.
இதனால், அப்பகுதியில் மரங்கள் வெட்டிக் காடுகள் அழிப்பது குறைந்துள்ளதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், கரண் தீப் சிங்கின் செயலை வரவேற்றுள்ளனர்.
கரண் தீப் சிங் தனது தோட்டத்தில் பல வகையான பழ மரங்களை வளர்ப்பதுடன், தனது இல்லத்தில் தமிழர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருட்களைச் சேகரிப்பதுடன் தமிழும் கற்று வருகிறார்.