புதுச்சேரியில் இன்று புதிதாக 431 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 பெண்கள் உட்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 581 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 260 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 3) கூறும்போது, "புதுச்சேரியில் 1,476 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 389, காரைக்காலில் 33, ஏனாமில் 5, மாஹேவில் 4 என மொத்தம் 431 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் ஒருவர் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். சாரம் கொசப்பாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த 64 வயது மூதாட்டி, பழைய சாரம் நடுத்தெருவை சேர்ந்த 62 வயது மூதாட்டி, நெட்டப்பாக்கம் மேட்டுத்தெரு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, மோகன் நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த 53 வயதுப் பெண், உருளையன்பேட்டை அன்னை இந்திரா நினைவு நகரைச் சேர்ந்த 52 வயது ஆண் ஆகிய 5 பேரும் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பனித்திட்டு மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 62 வயது முதியவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், காரைக்கால் டி.ஆர். பட்டினம் பெருமாள் கோயில் காலனியைச் சேர்ந்த 74 வயது முதியவர் காரைக்காலிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 15 ஆயிரத்து 581 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 1,993 பேர், காரைக்காலில் 140 பேர், ஏனாமில் 141 பேர் என 2,274 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 2,521 பேர், காரைக்காலில் 85 பேர், ஏனாமில் 141 பேர், மாஹேவில் 21 பேர் என மொத்தம் 2,768 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
குறிப்பாக, இன்று புதுச்சேரியில் 282 பேர், ஏனாமில் 29 பேர் என மொத்தம் 311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 279 (65.97 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 78 ஆயிரத்து 734 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 61 ஆயிரத்து 653 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.