கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி யில், கடந்த 27-ம் தேதி, கோவை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்து வந்த செ.ம.வேலுச்சாமி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சென்றார். பல்லடம் அருகே உள்ள வெட்டுப் பட்டான்குட்டை பகுதியில் அவரது கார் விதிகளை மீறி ஒரு வழிப் பாதையில் சென்றதாகத் தெரிகிறது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பல்லடத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சந்திரசேகர் (31) மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த சந்திரசேகரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை கேஎம்சிஎச் மருத்துவ மனையில் சந்திரசேகருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டது. அபாய கட்டத்தில் தொடர்ந்து இருப்பதால் அவரைக் காப்பாற்றுவது சிரமம் என மருத்துவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், சந்திரசேகர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக உறவினர்கள் கூறினர். இதனை கேட்ட சந்திரசேகரின் மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.
இந்த விபத்தும் ஒரு காரணமாக, செ.ம.வேலுச்சாமியின் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவர் மேயர் பதவியையும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.