தமிழகம்

தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கக் கோரிய வழக்குகள் முடித்து வைப்பு

கி.மகாராஜன்

தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கக் கோரிய வழக்குகளை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தட்டச்சு பள்ளிகளை திறக்கலாம் என அரசுத்தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது மதுரைக்கிளை.

தட்டச்சு, கணினி பயிற்சிப்பள்ளிகளின் சங்க மாநில தலைவர் செந்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில்," கொரோனா நோய் தொற்றால் அனைத்து பயிற்சி மையங்களும் மூடப்பட்டன. மார்ச் 25ஆம் தேதி முதல் தட்டச்சு, கணினி பயிற்சி பள்ளிகளும் மூடப்பட்டன. சுமார் பத்தாயிரம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த பணியை சார்ந்தே தங்களின் வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், தற்போது வரை இந்த மையங்களை திறப்பது தொடர்பாக எவ்வித தளர்வுகளும் வழங்கப்படவில்லை.

இது குறித்து அரசிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித பதிலும் இல்லை. இந்த பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள் மிகக் குறைந்த நேரமே மையங்களில் வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர். அதோடு ஒரு முறைக்கு 10 முதல் 15 மாணவர்களே வந்து செல்வர். பலரும் கடன் வாங்கி பயிற்சி மையங்களை நடத்தும் நிலையில், அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மையங்களை திறக்க அனுமதி அளிக்கும் பட்சத்தில் சானிடைசர்களை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் மாஸ்க் அணிவது போன்றவற்றை உறுதியாக கடைபிடிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

ஆகவே பத்தாயிரம் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தட்டச்சு, மற்றும் கணினி பயிற்சி பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இதே போல சோம சங்கர் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "ஆகஸ்ட் 30 ஆம் தேதி பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கியுள்ளது. அதன்படி செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தட்டச்சு உள்ளிட்ட பயிற்சிப் பள்ளிகள் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT