தமிழகம்

ஆற்றுப்பாசன விவசாயிகளுக்கு கைகொடுக்கும் மாம்பழத்துறையாறு

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் காலத்தில் வேளாண் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கமாக மாம்பழத்துறையாறு உள்ளது. வில்லுக்குறி முதல் முட்டம் வரையுள்ள ஆற்றுப்பாசன விவசாயிகளுக்கு கைகொடுக்கும் இந்த அணை சுற்றுலா தலமாக மாறி வருகிறது.

நீர்த்தேக்கம்

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முக்கிய நீர்ஆதாரமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் உள்ளன. மேலும் பொதுப்பணித்துறை நீர்ஆதாரத்துக்கு சொந்தமான 2040 குளங்களும் விவசாயத்துக்கு பக்கபலமாக விளங்குகின்றன.

வில்லுக்குறி அருகே உள்ள மாம்பழத்துறையாறு அணை, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீரை தேக்கிவைக்கும் இயற்கை எழில்சூழ்ந்த நீர்த்தேக்கமாக விளங்குகிறது.

பிற அணைகளில் தண்ணீர் இல்லாத நேரத்தில் வேளாண் தேவையை பூர்த்தி செய்யும் பெருமை மாம்பழத்துறைக்கு உண்டு. 44 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தால் வில்லுக்குறியில் இருந்து முட்டம், ராஜாக்கமங்கலம் வரை உள்ள இரட்டைக்கரை சானல் பகுதிகள் பசுமையுடன் காட்சி அளிக்கின்றன.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து இப்பகுதிக்கு தண்ணீர் கிடைத்தாலும், அங்கிருந்து தண்ணீர் கிடைக்காத நேரங்களில் மாம்பழத்துறையாறு கைகொடுக்கிறது. பத்மநாபபுரம் புத்தனாறு இரட்டைகரை, வலதுகரை கால்வாய், வள்ளியாற்று பகுதி விவசாயிகளுக்கு மாம்பழத்துறையாறு மிகுந்த உதவிகரமாக விளங்குகிறது. பிற அணைகளில் தண்ணீர் வற்றி தட்டுப்பாடான நேரத்தில் மட்டுமே மாம்பழத்துறையாறில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

மகத்தான பலன்

பொதுப்பணித்துறை நீர்ஆதார செயற்பொறியாளர் சுப்பிரமணி கூறும்போது, ‘ஆற்றுப்பாசன விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் விநியோகிக்க மாம்பழத்துறையாறை பயன்படுத்தி வருகிறோம். சிறிய நீர்த்தேக்கம் என்றாலும், இதன் பலன் மகத்தானது. முட்டம் சானலுக்கு உட்பட்ட கடைமடை பகுதியான உரப்பனவிளைக்கு அறுவடை பருவத்தில் உள்ள நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாம்பழத்துறையாறில் இருந்து விநாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாளில் அதே இரட்டைகரை சானலின் ராஜாக்கமங்கலம் பகுதிக்கும் மாம்பழத்துறையாறு தண்ணீர் விநியோகம் செய்யப்படும். மாம்பழத்துறையாறு அணையைக் காண சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத்தொடங்கியுள்ளனர். அணைப் பகுதிகளுக்கு சேதம் ஏற்படாதவாறு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது’ என்றார் அவர்.

மாம்பழத்துறையாறு அணைப் பகுதியை இயற்கை மாறாமல் பராமரிக்க வேண்டும் என்பதே அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் விருப்பம்.

SCROLL FOR NEXT