திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் மா, முருங்கை, நெல்லி மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அதிகபட்சமாக காமாட்சிபுரத் தில் 111.7 மி.மீ. மழை பதிவானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலையில் மழை பெய்துவருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் மழையால் மலையடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. பழநி அருகேயுள்ள வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது. கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிவதால் நேற்று மாலை முதல் மதகு திறக்கப்பட்டு 1.50 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, கொடைக்கானல் நகராட்சி நிர் வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.வேடசந்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் சின்னபள்ளம்புதூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான நெல்லி, மா, முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன. தோட்டங்களில் தனித்திருந்த குடியிருப்புகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.
பழநி, ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில், அதிகபட்சமாக காமாட்சிபுரத்தில் 111.7 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் மழை அளவு விவரம் (மி.மீ.): திண்டுக்கல்- 41.9, கொடைக்கானல்- 30, பழநி - 32, சத்திரப்பட்டி- 25, நிலக்கோட்டை - 98, நத்தம் - 30, வேடசந்தூர்- 51.2, காமாட்சிபுரம்- 111.7. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையில் பதிவான மொத்த மழை அளவு 505 மி.மீ. நேற்று பகலிலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.