சாதுர்மாஸ்ய விரதத்தையொட்டி காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந்த சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று விரதத்தை நிறைவு செய்தார்.
துறவு வாழ்க்கை வாழ்பவர்கள் ஆடி மாதப் பவுர்ணமியில் இருந்து கார்த்திகை மாத பவுர்ணமி வரை ஒரே இடத்தில் தங்குவார்கள். அவர்கள் இந்த 4 மாதங்களில் வேறு எங்கும் செல்லமாட்டார்கள். இந்த நேரங்களில் வேதங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வர். துறவிகள் மேற்கொள்ளும் இந்த விரதம் சாதுர்மாஸ்ய விரதம் எனப்படும்.
காஞ்சி மடாதிபதிகள் வழக்கமாக ஆண்டுதோறும் 2 மாதங்கள் (4 பக்ஷம்) மட்டுமே இந்தவிரதத்தை மேற்கொள்வர். அதன்படி, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஜூலை 5-ம்தேதி முதல் தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தங்கி சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார். இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் பஞ்சாங்க சதஸ், அத்வைத சபா, அக்னிஹோத்ர சதஸ், வேத பாராயணங்கள், வித்வத் சபைகள், வாக்யார்த்த பாடம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. இசை வித்தகர்களால் இசை நிகழ்ச்சிகளும் ஆன்-லைன் மூலம் நடைபெற்றன.
இந்த சாதுர்மாஸ்ய விரதம் நேற்று நிறைவு பெற்று, நிறைவு விழா நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து ஓரிக்கை மணிமண்டபம் வரை விஸ்வரூபயாத்திரை நடைபெற்றது.
இதில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். அங்கு சென்று வேத பாராயணங்களை படித்து இந்த விரதத்தை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிறைவு செய்தார்.