கரோனா தடுப்பு, காவல் பணியிலுள்ள போலீஸாரின் பிள்ளைகளுக்கு 2-வது கட்டமாக காவல் ஆணையர், கல்லூரிகளில் சீட் வாங்கிக் கொடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு பணியில் முன்கள வீரர்களாக காவல் துறையினரும் உள்ளனர். அத்துடன் சட்டம் ஒழுங்கு, ரோந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உட்பட மேலும் பல பணிகளையும் கவனிக்கின்றனர். இதனால், விடுப்பு எடுத்துதங்களது குடும்பத்தினரின் மேல்படிப்புக்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை என்று கவலை தெரிவித்தனர்.
இதையறிந்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், பிளஸ் 2முடித்து, மேற்படிப்பு படிக்க விரும்பும் போலீஸாரின் பிள்ளைகளின் விவரங்களை சேகரித்து அவர்கள் விரும்பும் கல்லூரியில் சேர தனித்தனியாக முயற்சி மேற்கொண்டார்.
அதன்படி, முதல் கட்டமாக கடந்த மாதம் 20-ம் தேதி, 52 பேருக்கு அவர்கள் விரும்பும் கல்லூரியில், விரும்பும் பாடப்பிரிவில் சேர கல்லூரி சேர்க்கை அனுமதி கடிதம் வாங்கிக் கொடுத்தார். இந்நிலையில், நேற்று 2-வது கட்டமாக மேலும் 71 போலீஸாரின் பிள்ளைகளுக்கு விரும்பிய கல்விக்கான கல்லூரி சேர்க்கை அனுமதி கடிதத்தை பெற்றுக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களுக்கு சீட் வழங்கிய கல்லூரி நிர்வாகிகளையும் அழைத்துபாராட்டினார். எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். காவல் ஆணையரின் முயற்சியால் இதுவரை 123 பேர் பயனடைந்துள்ளனர்.