தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் நடைபயிற்சி சென்ற கிராம நிர்வாக உதவியாளரை கொலை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இக்கொலையை கண்டித்து வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லாவரத்தைச் சேர்ந்த சங்கர் ராஜ் (52), பெருங்களத்தூரில் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சிக்கு சென்றவர் கொலை செய்யப்பட்டார். அவரிடம்இருந்த செல்போன் மற்றும் உடமைகள் காணாமல் போயிருந்தன. இதுதொடர்பாக பீர்க்கன்காரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதையடுத்து, சங்கர் ராஜின் செல்போன் எண்ணை போலீஸார் தொடர்புகொண்டு, அதன் சிக்னலை வைத்து அதை வைத்திருந்தபெருங்களத்தூரைச் சேர்ந்த பிரவீன்குமார் (29) என்பவரை கைதுசெய்தனர். விசாரணையில் பூங்காவில் அமர்ந்து பிரவீன்குமார் கஞ்சாஅடிக்கும்போது அவரை சங்கர் ராஜ் தட்டிக் கேட்டதாகவும், அதனால் அவரை அடித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக, தூய்மைப் பணியாளர் அப்பு(31), பெருங்களத்தூர் சக்திவேல்(45), வெற்றிவேல்(26) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
உயிரிழந்த சங்கர் ராஜுக்கு தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சரவணன் உட்பட வருவாய்த் துறையினர் நேற்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் கொலையைக் கண்டித்தும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர். அப்போது, சங்கர் ராஜ் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.