கயத்தாறு சுற்று வட்டாரப் பகுதிகளை தொல்லியல் இடங்களாக அறிவிக்கக்கோரி மனு மீது 10 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கயத்தாறு பகுதியைச் சேர்ந்த அருமைராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
கயத்தாறு பகுதியில் பராக்கிரமபாண்டியகுளம் (எ) இந்திரகுளம், ராஜா புதுக்குடி, வேப்பன்குளம், தெற்கு மயிலோடை, கோவிந்தபுரம் கிராமங்களில் அதா குழுமம் சோலார் நிறுவனம் சோலர் மின் திட்டத்தை செயல்படுத்துகிறது. இப்பணியின் போது பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி, மனித எலும்புகள் கிடைத்து வருகின்றன.
இது தொடர்பாக வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் பழங்கால தடயங்களையும், ஆவணங்களையும் சோலார் நிறுவனம் அழித்து வருகிறது. ஏற்கெனவே இப்பகுதியில் தங்க ஏர் கலப்பை கண்டெடுக்கப்பட்டு நெல்லை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
எனவே, உள்ளாட்சி மற்றும் மின் துறையிடம் முறையாக அனுமதி பெறாமல் சோலார் மின் திட்டப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும்,
பராக்கிரமபாண்டியகுளம் (எ) இந்திரகுளம் மற்றும் ராஜா புதுக்குடி கிராமம், வேப்பன்குளம், தெற்கு மயிலோடை, கோவிந்தபுரம் பகுதிகளை தொல்லியல் பகுதியாக அறிவிக்கவும், இப்பகுதியில் கிடைத்த பழங்கால பொருட்களை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். பின்னர் மனுதாரரின் மனுவை தொல்லியல் துறைச் செயலர் 10 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.