திருப்பராய்த்துறை நந்தவனம் குடியிருப்புவாசிகள் ஆர்ப்பாட்டம். 
தமிழகம்

10 ஆண்டுகளாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இல்லை; திருப்பராய்த்துறை நந்தவனம் குடியிருப்புவாசிகள் ஆர்ப்பாட்டம்

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சிக்குட்பட்ட நந்தவனம் பகுதியில் குடியிருப்புவாசிகளுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தரக் கோரி ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத் மணி, சட்டக்கல்லூரி மாணவர் ஆர்.சதீஸ் ஆகியோர் தலைமையில் பள்ளிக் குழந்தைகள் உட்பட நந்தவனம் பகுதி குடியிருப்புவாசிகள் இன்று (செப்.2) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வினோத் மணி கூறுகையில், "திருப்பராய்த்துறை ஊராட்சிப் பகுதியில், தாருகாவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நிலங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த 50-க்கும் அதிகமான குடும்பங்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கம் காரணமாக நந்தவனம் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.

நந்தவனம் நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அரசின் எந்த நலத் திட்டங்களும் இந்தக் குடியிருப்புவாசிகளுக்குக் கிடைப்பதில்லை. 10 ஆண்டுகளாக குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உட்பட எந்த அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, மின்சாரம் இல்லாததால் இந்தக் குடியிருப்புகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, இந்தக் குடியிருப்புவாசிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை மூலம் அடிமனை ரசீது வழங்கவும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் இந்தக் குடியிருப்புப் பகுதியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT