காந்தி மார்க்கெட்டைத் திறக்கக் கோரி இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 32 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, காய்கனி மொத்த விற்பனைச் சந்தை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்தில் திறந்தவெளியில் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக மழை பெய்யும்போது அங்கு தேங்கும் மழைநீரில் காய்கறிகள் வீணாவதாகவும், இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் வியாபாரிகளில் ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.
மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள அரசு, காந்தி மார்க்கெட்டையும் திறக்க வேண்டும். இல்லையெனில், ஜூன் 7-ம் தேதி இரவு முதல் காய்கறி மொத்த விற்பனையைக் காலவரையின்றி நிறுத்திவிடுவோம் என்றும் அறிவித்தனர். ஆனால், அரசு அலுவலர்களின் பேச்சுவார்த்தையால் இதுநாள் வரை காய்கறி மொத்த விற்பனை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்தில் நடைபெற்று வருகிறது. ஆனாலும், காந்தி மார்க்கெட்டைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு வியாபாரிகள் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, கள்ளிக்குடியில் உள்ள மத்திய வணிக வளாகத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பான நீதிமன்ற வழக்கில், ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் இன்று (செப்.2) வெளியானது.
இந்தநிலையில், காந்தி மார்க்கெட் வியாபாரியான எஸ்கேடி.பாண்டியன் என்பவர், பூட்டிக் கிடக்கும் காந்தி மார்க்கெட்டின் பிரதான நுழைவு வாயில் முன் இன்று தனியொருவராக அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டைத் திறப்பதுபோல், காந்தி மார்க்கெட்டையும் திறக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாண்டியனின் போராட்டம் குறித்துத் தகவலறிந்த 100-க்கும் அதிகமான வியாபாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளில் 32 பேரைக் காவல்துறையினர் கைது செய்து பாலக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். திருமண மண்டபத்துக்குள் செல்வதற்காக போலீஸ் வேனில் இருந்து இறங்கிய வியாபாரிகள், திடீரென பாலக்கரை பிரதான சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினரின் அறிவுரையை ஏற்று உள்ளே சென்றனர்.