தமிழகம்

இலங்கையில் முதல்முறையாக மதுரை மல்லிகை சாகுபடி

செய்திப்பிரிவு

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் இலங்கையில் முதல்முறையாக மதுரை மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் மல்லிகைப் பூக்கள் தனித்துவம் வாய்ந்தவை. இப்பூக்கள் மதுரை சந்தையில் மொத்தமாக விற்பனை செய்யப் படுவதால் மதுரை மல்லிகை எனப் பெயர் உண்டானது. மேலும் இதற்காக புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள கோயில்கள், திருவிழாக் களில் விரைவில் மதுரை மல்லிகைப் பூக்களின் நறுமணம் வீசப்போகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தின் உதவியுடன் இலங்கையில் முதல்முறையாக வவுனியா மாவட்டத்தில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி என். நடராஜன் கூறிய தாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பூஜை மற்றும் இதர வழிபாடுகளில் மல்லிகைப் பூ பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக மதுரை மல்லிகையின் நறுமணம் மூன்று நாள் வரை நீடிக்கும். இலங்கையில் மல்லிகைச் செடிகள் பயிரிடப்படுவதில்லை. இதனால் இலங்கையில் உள்ள கோயில்களில் மல்லிகைப் பூக்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே இலங்கை மண்ணில் மதுரை மல்லிகையைப் பயிரிட முயற்சி செய்தோம். வவுனியாவைச் சேர்ந்த விவசாயி பிரேமந்திரன் ராஜா மல்லிகையை சாகுபடி செய்ய முன்வந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய வர்த்தக சம்மேளனத்தின் உதவி யுடன் 30 ஆயிரம் மல்லிகைப் பதியன்களைப் பெற்று இலங்கை யில் முதல்முறையாக வவுனியா வில் கடந்த வாரம் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் போரினால் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண்கள் மல்லிகை சாகுபடியில் ஆர்வம் காட்டினால் அவர்களுக்குத் தேவை யான உதவிகள் செய்யப்படும் என்றார்.

இதுகுறித்து வவுனியா புளியங் குளத்தைச் சேர்ந்த விவசாயி பிரேமந்திரன் ராஜா கூறியதாவது:

இலங்கையில் பூ உற்பத்தியை ஊக்குவிப்பது கிடையாது. ஆனால், இங்கு மல்லிகைப் பூவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மதுரை மல்லிகை பயிரிடப்படும் இடங்களுக்குச் சென்று சாகுபடி செய்யும் முறைகளை கற்றுக்கொண்டேன்.

அதைத் தொடர்ந்து யாழ்ப் பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் வவுனியா மாவட்டம், புளியங்குளத்தில் உள்ள எனது தோட்டத்தில் 14 ஆயிரம் கன்றுகளை முதற்கட்டமாக சாகுபடி செய்துள்ளேன். மீதமுள்ள 16 ஆயிரம் கன்றுகளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் சாகுபடி செய்ய வழங்கியுள்ளோம். யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளிலும் மல்லிகை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மல்லிகைப் பூ மூலம் நல்ல வாழ்வாதாரம் கிடைக்கும் என்றார்.

SCROLL FOR NEXT