சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையில் வசிக்கும் கிராமமக்களுக்கு குடிநீர் வராததால் ஒரு குடம் ரூ.10 வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மானாமதுரை அருகே கீழப்பசலை ஊராட்சி அரசனேந்தலில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமம் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இக்கிராமத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, வைகை ஆற்றில் அமைக்கப்பட்ட ஆழ்த்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மோட்டார் பழுது, ஆழ்த்துளை கிணறு தண்ணீர் இல்லாதது போன்ற காரணங்களால் குடிநீர் விநியோகம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதனால் அக்கிராமமக்கள் வாகனங்களில் வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆன்டி, தர்மராஜ் கூறுகையில், ‘‘அரசனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும் உள்ளனர்.
அவர்கள் காலையிலேயே விவசாயப் பணிக்கு சென்றுவிடுவர். குடிநீர் வராததால் அவர்களால் எந்த பணிக்கும் செல்லாமல் குடிநீர் வாகனத்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கிராமமக்களை திரட்டி விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்,’’ என்று கூறினர்.