சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்யும் லேப் டெக்னீசியன்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்காததால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலைங்களில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் 700 லேப் டெக்னீசியன்கள் (கிரேடு -3) நியமிக்கப்பட்டனர்.
அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 1,508 லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதில் பலருக்கு கரோனா பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து கரோனா பரிசோதனை லேப்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் லேப்டெக்னீசியன்களுக்கு ஜூன் முதல் மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து லேப் டெக்னீசியன்கள் கூறுகையில், ‘ கரோனா தொற்று உள்ளவர்களிடம் சளி, ரத்த மாதிரிகளை எடுக்கிறோம். தற்போது அவுட்சோர்சிங் முறையில் மூன்று மாதங்களுக்கு மட்டும் லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே வழங்கும் நிலையில், அந்த ஊதியத்தையும் முறையாக வழங்க மறுக்கின்றனர்,’ என்று கூறினர்.
இதுகுறித்து சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி கூறுகையில், ‘ நிதி ஒதுக்காததால் ஊதியம் வழங்கவில்லை. நிதி கேட்டுள்ளோம். வந்ததும் ஊதியம் வழங்கப்படும்,’ என்று கூறினார்.