சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், இணைய வசதி இல்லாத குழந்தைகளுக்காக வீடு, வீடாகச் சென்று பாடம் நடத்தும் வாசல் பள்ளி திட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கவிஞர் பா.தென்றல். இவர் வார, மாத இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
அவர் தேவதைகள் கூட்டம் என்ற பெயரில் கடந்த ஓராண்டாக உள்ளூரில் பல பள்ளிக் குழந்தைகளை ஒருங்கிணைத்து அவருடைய வீட்டில் மாதம் ஒருமுறை கதை சொல்லும் கூட்டம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக கரோனா தொற்று பரவாமல் இருக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து தென்றல் பள்ளி குழந்தைகளின் அலைபேசி எண்களை இணைத்து வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி கல்வித் தொடர்பான மாணவர்களின் சந்தேகளுக்கு விளக்கமளித்து வருகிறார்.
மேலும் தற்போது பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன. ஆனால் இணைய வசதி இல்லாத குழந்தைகள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து தென்றல் இணைய வசதி இல்லாத குழந்தைகளுக்காக வாசல் பள்ளி திட்டத்தை தொடங்கியுள்ளார்.
அவர் குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று, வாசலில் அமர்ந்தும், போதிய இடவசதி இல்லாத இடங்களில் பூட்டியிருக்கும் கடைகளிலும் முன்பாகவும் பாடம் நடத்தி வருகிறார். தனியார் பள்ளி ஆசிரியரின் இந்த முயற்சி மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் கவிஞர் பா.தென்றல் கூறியதாவது: இணைய வசதியே இல்லாத குழந்தைகளின் நிலையை யோசித்து வாசல் பள்ளி திட்டத்தை தொடங்கினேன். மாலை, மதியம் நேரங்களில் அவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறேன். அட்டவணை தயாரித்து, அதன்படி தினமும் ஒவ்வொரு பகுதிக்காக சென்று வருகிறேன்.
இணைய வசதி இல்லாதததால் அவர்கள் படிப்பு வீணாகிவிட கூடாது என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். பெற்றோரும் ஆர்வமுடன் தங்களது குழந்தைகளை அனுப்புகின்றனர். குழந்தைகளும் விருப்பத்துடன் படிக்கின்றனர், என்று கூறினார்.