கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் இருந்து குறைந்தளவே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாது என்பதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
கரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. இடையே சுமார் 15 நாட்கள் ஜூன் மாதம் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், மீண்டும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் அரசு உத்தரவுப்படி பொதுப் போக்குவரத்து தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் ஆகியவை ஒன்றோடு ஒன்று வியாபாரம் உள்ளிட்ட அனைத்திலும் தொடர்பு உள்ளன. ஆனால், மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு பொதுமக்களிடையே ஏமாற்றத்தை அளித்து.
கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 67 பேருந்துகள் உள்ளன. 350 ஓட்டுநர், நடத்துநர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில், இன்று 16 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. கோவில்பட்டியில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட எல்லையான சன்னதுபுதுக்குடி வரை பேருந்து இயக்கப்பட்டது.
அதே போல், விளாத்திகுளம் பணிமனையில் உள்ள 36 பேருந்துகளில் 9 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இந்த பணிமனையில் 90 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளனர். விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி, வேம்பார், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கம் என்பதால் மக்களிடம் அதிகளவு வரவேற்பு இல்லை. இதனால் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் அரசு அறிவித்த எண்ணிக்கை மக்கள் ஏறியவுடன் இயக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
அரசு உத்தரவு கிடைத்தவுடன் மாவட்ட எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும். மேலும், இன்று (2-ம் தேதி) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன்படி பணி வழங்கப்பட்டு வருகிறது என பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜவுளி வியாபாரி செண்பகராஜ் கூறும்போது, நாங்கள் சங்கரன்கோவில், திருநெல்வேலி சென்று தான் மொத்தமாக ஜவுளிகளை வாங்கி வந்து வியாபாரம் செய்ய வேண்டும். ஜூன் மாதம் மண்டலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட்டபோது கூட எங்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால், தற்போது மாவட்டங்களுக்குள் மட்டும் என்றால், நான் கழுகுமலை வரை தான் பேருந்தில் செல்ல முடியும், அதன்பின்னர் ஆலங்குளம் வரை நடந்து அல்லது இருசக்கர வாகனத்தில் சென்று, அங்கிருந்து சங்கரன்கோவில் செல்ல வேண்டும். இதே போல் தான் திருநெல்வேலி செல்ல கோவில்பட்டியில் இருந்து சன்னதுபுதுக்குடி வரை சென்று, அங்கிருந்து நடந்து கங்கை கொண்டான் சென்று பேருந்தை பிடிக்க வேண்டும்.
ஏற்கெனவே போதியளவு வியாபாரம் இல்லை. தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் எங்களை போன்ற சிறுவியாபாரிகள் தினமும் வதைப்பட்டுகொண்டிருக்கிறோம். பொது போக்குவரத்து அரசு முழுமையாக தொடங்க முன் வர வேண்டும், என்றார்.