கி.வீரமணி: கோப்புப்படம் 
தமிழகம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாநில அரசுகள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்; உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு

செய்திப்பிரிவு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாநில அரசுகள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (செப்.1) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதலியவற்றில் பணிபுரிந்து பிறகு மேற்பட்டப் படிப்பு படிக்க முன் வரும் மருத்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவதற்கு தமிழ்நாடு அரசுக்கு, மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்றும், இதில் தேவையின்றி தனது மூக்கை நுழைத்து, மாநில அரசு அதிகாரத்தைப் பறிக்கும் உரிமை இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்றும், மாநில அரசுகளே சிறப்பு ஒதுக்கீடு செய்து கொள்ள முழு உரிமை பெற்றவை என்பதையும் தெளிவுபடுத்தி நேற்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையில் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்!

கூடுதல் மதிப்பெண்

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்கு, அரசு மருத்துவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்க ஏதுவாக அரசாணை பிறக்கப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்கு, தொலைதூரப் பகுதி, மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவிகிதம் வரை கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

இதனால் தனியார் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறி, தனியார் மருத்துவர்கள் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன.

மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு

இந்த வழக்கை ஏற்கெனவே நீதிபதிகள் அமர்வு விசாரித்தபோது, இவ்வாறு கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என்ற சட்டப் பிரச்சினை எழுப்பப்பட்டது.

இதையொட்டி, இந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இது மாற்றப்பட்டு அருண்மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வு விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில், 'சேவை மனப்பான்மையோடு பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. இதனை எதிர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை; எனவே அதை மருத்துவக் கவுன்சில் தடை செய்ய முடியாது. இந்திய மருத்துவக் கவுன்சில் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு; அதன் பங்கு மருத்துவக் கல்வியின் தரத்தை நிர்ணயிப்பதும், ஒருங்கிணைப்பதும் மட்டும்தான்' என்று திட்டவட்டமாகக் கூறி, அதைத் தாண்டி அதன் அதிகாரத்தை நீட்ட முடியாது, கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சட்டபூர்வ அதிகாரம் உண்டு

மாநில அரசுகள் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட சட்டப்படியான இட ஒதுக்கீட்டுக்குள் இந்த மேற்பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புகளை நிரப்பிட அதற்கு சட்டபூர்வ அதிகாரம் உண்டு என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இது அருமையான திருப்புமுனை தீர்ப்பு; ஏற்கெனவே இதே அமர்வு இரண்டு நாட்களுக்கு முன் அளித்த அருந்ததியர் உள் ஒதுக்கீடு சம்பந்தமான தீர்ப்பில் இடஒதுக்கீட்டினை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை, அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதைத் திட்டவட்டமாகக் கூறி தமிழ்நாட்டு அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு (3%) செல்லும் என்று ஆக்கியதை வரவேற்றுள்ளோம்.

நமது முக்கிய வேண்டுகோள்!

இந்த ஆண்டு மேற்பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை முடிந்துவிட்ட காரணத்தால் வரும் கல்வி ஆண்டிலிருந்து அமல்படுத்துவது உசிதம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கிய செய்தி என்னவென்றால், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' (Super Speciality) என்ற மேற்பட்டப்படிப்பைத் தாண்டிய படிப்புகளுக்கு மாணவர்களுக்கான சேர்க்கையில் இந்த ஆண்டே நிரப்ப எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது நமது முக்கிய வேண்டுகோளாகும்.

வரலாற்றைப் படைத்திடும் தீர்ப்பு

மாநில அரசுக்குள்ள இட ஒதுக்கீடு உரிமை பற்றி மேலும் உறுதிப்படுத்தியுள்ள இந்த 5 நீதிபதி அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றைப் படைத்திடும்.

மருத்துவக் கவுன்சில் தனது ஆக்டோபஸ் அவதாரத்தை நிறுத்திக் கொள்ள மறைமுகமாக எச்சரிக்கை மணி அடிக்கிறது போன்றது இத்தீர்ப்பு.

இதன் மூலம் இனி 'நீட்'டுக்கும் புதிய வழி திறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளடக்கமாக உள்ளது. உண்மை இறுதியாய் வெல்லும் என்பது நிச்சயம், சமூக நீதியைச் சாய்த்து விடும் சதி வெற்றி பெறாது!".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT