பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: கிராமப்புற அரசு சேவை மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு; தமிழக அரசு நடைமுறைப்படுத்த மருத்துவ அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அடிப்படையாக வைத்து கிராமப்புற அரசு சேவை மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் சிறப்பு மருத்துவத்தில் 50% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு.அகிலன் வெளியிட்ட அறிக்கை:

"முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் அரசு மருத்துவர்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தொடுத்த வழக்கு வெற்றி பெற்றுள்ளது. அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு உரிமை இருக்கிறது எனவும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ) உரிமை இல்லை எனவும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக பாடுபட்ட அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், சட்ட வல்லுநர்களுக்கும்,ஆதரவு அளித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இச்சங்கம் பெரும் நன்றி, பாராட்டுகளைப் பதிவு செய்கிறது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் எங்களை ஊக்கப்படுத்தி உள் முறையீடு செய்தார்கள். அவர்களுக்கும் இச்சங்கம் நன்றி தெரிவிக்கிறது.

இனிவரும் நாட்களில் தமிழக அரசு இந்தத் தீர்ப்பினை அடிப்படையாக வைத்து கிராமப்புற அரசு சேவை மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் சிறப்பு மருத்துவத்தில் 50% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்".

இவ்வாறு அகிலன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT